முருங்கைவிதைகளை நீருக்குள் இட்டு பின் வடிகட்டி குடிப்பதால், கிருமிகளை விலக்கி சுத்தமான நீரை பருகலாம் என்ற தகவலை இணையத்தில் வாசித்துக் கொண்டிருந்தபோது. "என்ன புழுக்கம் புழுங்குது" என்ற முணுமுணுப்போடு வாசலில் என்னருகில் வந்தமர்ந்தாள்.
"தண்ணீ தாகமே நிக்கமிண்டக்கிடா, உனக்கெப்படியிருக்கு" என்றாள்.
"மண்பானைத் தண்ணீ நல்லாத்தாம்ம இருக்கு, கொஞ்சநாள்ல பழகிரும். இனி துட்டு குடுத்து தண்ணி வாங்குததா உத்தேசமில்லம்ம" என்றதோடு "முருங்க வெத போட்டு குடிச்சா கிருமி போயிருமாம், இதுல போட்ருக்கான்" என்றதும்.
"முருங்க வெதைக்கி மரம் வளக்கியாங்கோம்" என்று கூறிவிட்டு காற்றுக்கும் மரமில்லாத இடத்தில் தன்முந்தானையே சுழற்றி கொஞ்சம் காற்றினை உற்பத்தி செய்தாள். நான் அம்மாவைப் பார்த்தேன் லேசாக சிரித்தாள். அது என்னை கேலி செய்வதானவொரு மன உழற்றியை உண்டுபண்ணியது.
இரவில் தூங்குமுன் "உங்கம்ம பக்கத்துவீட்ல போய் தண்ணீ வாங்கி குடிக்காவ" என்றாள் தனம், என் மனைவி.
"ம்" என்றேன் யோசனையோடு.
"அந்தம்மா நேத்து சாய்ங்காலம் யாங்கிட்ட சொல்லுது, நல்ல தண்ணீ வாங்கி குடிக்கலாம்லா. நான் வேணும்னா கேன் போடச் சொல்லவான்னு"
நான் மீண்டும் "ம்" என்றேன்.
திரும்பிப் படுத்துக்கொண்டாள். சாளரம் திறந்திருந்தும் வராத காற்றில் வியர்த்துக்கொண்டிருந்தது.
இரண்டாவது நாள் சனிக்கிழமை மாலை ஞெகிழி டப்பாவை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். நீரோடு திரும்பினேன். "ஏன் ராசா தண்ணீ கொண்டாந்துட்டான்" என்றாள். பால்யத்தின் கிராமத்து வீட்டிற்கு இரண்டு குடம் கட்டி அய்யனார் கோவிலிலிருந்து நீர் எடுத்துவந்த போது அவள் உதிர்த்த இதே வார்த்தைகள் நினைவில் ஒழுகியதும் அவளைப்பார்த்தேன் மெல்லச் சிரித்தாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக