ஆடுபுலி ஆட்டம் தான் கதையின் மையம் என்பதை அறிவித்தே தொடக்கம் கொள்கிறது இப்புதினம். முதல் பகுதி பத்தி எழுத்து நாவல் என வாசிக்கும் மனதில் அயர்ச்சியையும் தொடந்து வாசிக்கும் ஆர்வத்திற்கு தடை போடுவதாகவும் உள்ளது, ஆனால் தேசிகர் கதை சொல்லத் தொடங்கியதும் எழுத்து மாற்றம் கொள்வது கதைக்கான தொடர்ச்சி. பழந்தமிழ் நாடு பற்றிய அறிமுகம் நான்காம் தலைமுறை ஆட்சியில் தொடரும் கலைச் சிறப்புகள் என சலிக்காத சொல்லாடல்.
ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் கவனப்படுத்துவதில் அடுத்தடுத்த தலைப்புகளை பயன்படுத்தியிருக்கிறார் படைப்பாளி. சிற்பக்கலைக்காக வெட்டப்படும் மலைகள் அதற்காக உழைக்கும் தொழிலாளிகள் என சொல்லப்படும் விவரணைகளே அவர்களின் உழைப்பையையும் இன்று நாம் காணும் ஒரு சிற்பத்தின் பின்னாலிருக்கும் அடித்தட்டு மக்களின் பங்களிப்பையும் விவரணை செய்கிறது, வென்னீரையும் மரக்குச்சிகளையும் கொண்டு பாறையை பிளப்பதும் நிழலை வைத்து உயரத்தை அளப்பதும் சிற்பிகளால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, கற்கடிகாரம், கல்லில் இசைக்கருவி, நுண் கற்சிற்பங்கள் என பல ஆச்சரியங்கள். இவையெல்லாம் அறிந்துகொள்ளும் புள்ளியாகக் கருதி தொடர்ந்து வாசிக்கலாம்.
கதையின் மையமான ஆட்டம் செம்மாரியின் காதல் களிப்புகளுக்கு பிறகு வேகம் எடுத்து பக்கங்களை புரள வைக்கிறது. விளையாட்டுக்குப் பின்னான சதி வலை கதையை வேறொரு திசையில் நகர்த்திச் செல்கிறது. அட!! ஆமால்ல எனும் ஆச்சரியமும் இருக்கிறது இடையிடையில். ஒட்டமும் நடையுமான வாழ்க்கையில் புதிய குணங்களை வெளிப்படுத்துகின்ற நாம் ஏற்கனவே அறிந்த கதாப்பாத்திரத்திற்கு அதற்கேற்ப சிறு அறிமுகத்தை போகிற போக்கில் சொல்லிச் செல்வது சிறப்பு.
செம்மாரியின் விளையாட்டு உத்தியை வாழ்வில் நேரும் இன்னலான தருணத்தில் தன்னையும் சார்ந்தோரையும் காத்துக்கொள்ள பயன்படுத்தி வாசிப்போருக்கு சாகச நிகழ்வின் சாத்தியங்களை அனுபவிக்கச் செய்திருப்பது படைப்பாளியின் திறன், அவ்வப்போது செம்மாரி என்ன சிந்திக்கிறான் என்பதை ஊகிக்க வழி கிடைக்கும் பொழுதில் அதை செய்து முடித்துவிடுகிறான்.
ஆடுபுலியாட்ட கட்டங்களை சித்தரிக்கும் காட்சியிலும் நகலன் அதை வரையும் காட்சியிலும் எங்கள் ஊரின் மைதானத்தில் இருந்த வேப்பமரத்தடி மண்டபம் (சோம்பேறி மண்டபம் என்றுதான் அழைப்பார்கள்) தான் நினைவில் வந்துவந்து போனது, அங்கு இவ்வாட்டம் நிகழ்வதுண்டு அதோடு நீச்சல்காரன் (http://tech.neechalkaran.com/2012/05/adu-puli.html?m=1) இணையதளத்திலுள்ள விளையாட்டை விளையாடிப் பார்த்ததும் நினைவில் ஆடியது.
இனி ஆடும் ஆடுபுலியாட்டமும் கண்டால் ஏன் புலியைக்கண்டாலும் செம்மாரியின் நினைவுதான் வரும்.
எழுத்துப்பிழைகளை தவிர்த்தும் நிலப்பரப்பு பற்றிய காட்சி சித்தரிப்பிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம், வாழ்த்துகள்.
1 கருத்து:
அருமை
கருத்துரையிடுக