திங்கள், 28 ஜூலை, 2025

குளம்பிக் கடை

குன்றத்தூரில் நல்ல குளம்பி குடிக்க ஆண்டாள் குப்பத்தில் ஒரு கடை இருக்கிறது. இப்போது அந்தப் பகுதி மேத்தா நகர் என்று மெல்ல மெல்ல உருமாறியிருக்கிறது இந்த பத்து ஆண்டுகளில். இதே இடத்திற்கு "கன்னடா பாளையம்" என்றொரு பெயரும் இருந்திருக்கிறது. இப்போது "ஆக்சிஸ்" வங்கியிருக்கும் சாலையோரத்தில் இருந்த நெடுஞ்சாலைத் துறையின் பலகை இன்று இல்லை ஆனால் அங்குள்ள தமிழ் இல்லாத பிறமொழி (அநேகமாக கன்னடம்) பேசும் மக்கள் அவர்களின் கோயிலில் ஊர் பெயரை தக்கவைத்திருக்கிறார்கள். இருக்கட்டும் நாம் குளம்பிக் கடைக்கு வருவோம். இரண்டு கிழமைக்கு முன் ஊரிலிருந்து வந்தபின் திங்களன்று பள்ளி செல்லும் போதுதான் கவனித்தேன் கடையின் முன்னால் பெரிய பதாகை அவரின் முகத்தைத் தாங்கியிருந்தது. பார்ப்பதற்கு சுறுசுறுப்பாக இருக்கும் ஆள் இந்த இடைப்பட்ட நான்கு நாட்களில் இறந்தது துயரத்தைக் கடத்தியது.

எப்போதும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு அலுவலகத்தில் இருந்து வீடு வரும் வழியில் சரவணன் ஆசானுடன் சேர்ந்து பெரியபணிச்சேரியிலுள்ள மலையாளிக் கடையில் எலுமிச்சைத் தேனீர் அருந்துவது வாடிக்கை. சென்ற புதன் அக்கடையில் தேனீர் கலக்கும் வட இந்தியர்  "என்ன ஒரே ஆள்தான் வர்து" என்றார். என்னடா இந்த ஆள் இப்படிக் கேட்கிறாரே என விழி பிதுங்கி பின்னர் ஊருக்கு போயிருந்ததாகச் சொன்னதும் "நான் போவில்லை நீங்க மட்டும் போயிருக்கு" என்றார் ஆசானும் நானும் உரக்கச் சிரித்துவிட்டோம், இது பேரன்பாக இருக்கிறது என்றேன். மறுநாள் சென்றபோது அவர் இல்லை, வேறொருவர் தயாரித்துத் தந்தார். தாமதமாக அவர் வந்தபோது என்ன ஆளைக் காணோம் என்றதும் தனது சுட்டு விரலைக் காண்பித்தார்.

கருத்துகள் இல்லை: