திங்கள், 10 நவம்பர், 2025

பாதுகாப்பான இருள் தேவை

தொலைவிலிருந்து பார்க்கும்போது அந்தப் பையன் சுவரில் ஏதோ எழுத முயற்சிக்கிறான் என்றெண்ணும் போதே அருகில் வரவும் பார்த்த காட்சி நகைப்புக்குரியதாக இருந்தது. அவனது தோழியா காதலியா எனத் தெரியவில்லை அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல தேர்ந்தெடுத்த இடம் சென்னை திருச்சி நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள துணைச் சாலை (தரப்பாக்கம்). மேம்பாலச் சுவரில் வண்ணச்சரிகை தாள்கள் கொண்டு இரண்டடி கால்வாய்க்கு இப்புறம் நின்று தோராயமாக அறுபது டிகிரி கோண‌அளவில் சாய்ந்து பணி செய்து கொண்டிருந்தான். உடன் வந்த பெண் உற்சாகத்தில் துள்ளிக்குதிக்க காத்திருந்ததுபோலத் தெரிந்தது.

பக்கத்திலோ தூரத்திலிருந்தோ  வீடுகளில் சேகரித்து வந்த மலக்கழிவுநீரை இந்த கால்வாயில் தான் திறந்துவிடுகிறார்கள். இவர்கள் அறியாத மற்றொரு பகலில்.

இரவில் இந்த சாலையில் குறிப்பிட்ட இடைவெளியில் பல இணைகளைப் பார்க்கமுடியும். சிலர் வண்டியின் முன் விளக்கை ஒளிரவிட்டு ஒளிந்துகொண்டு பேசிக் கொண்டிருப்பார்கள் (அப்படியே கற்பனை செய்து கொள்ளலாம்). இவர்களுக்குப் பாதுகாப்பான இருளை அமைத்துக் கொடுக்க வேண்டிய கடமை நம் குமூகத்திற்கு உள்ளதாக எண்ணவேண்டியிருக்கிறது அவ்வளவுதான்.