செவ்வாய், 7 ஏப்ரல், 2026

படாம்

 தனியார் மற்றும் அரசு காட்சிக் கூடங்களில் நடைபெறும் கண்காட்சிகளில் படைப்பை அது வெளிப்பட்டிருக்கும் வடிவத்தை மட்டுமே கண்டு நமது பார்வை நகரும் பொழுதில் ஏற்படும் இன்பம் அயர்ச்சி கோபம் வெறுப்பு என ஒவ்வொரு உணர்வும் படைப்புக்கான முழுமையை நிரப்பிக் கொண்டே செல்லும்.

சென்னை கவின் கலைக் கல்லூரியில் "படாம்" என்ற தலைப்பில் ஆடை வடிவமைப்புத் துறை இறுதியாண்டு மாணவர்கள் அவர்களது படைப்புகளை வகைப்படுத்தியிருந்த விதம் அறிதலுக்கான ஆர்வத்தைத் தூண்டும் விதமாக இருந்தது. சாதாரண பார்வையாளனாக இந்தக் காட்சியை அணுகி அவை உருவாகி வந்த வழிமுறைகளை மாணவர்கள் விளக்கிக் கொண்டே வந்த போது எனக்குள் இருந்த மாணவன் விழித்துக்கொண்டு உற்சாகம் வெளிப்பட ஒவ்வொரு ஓவியத்திலும் ஆச்சரியத்துடன் கற்றுக்கொள்ளத் தொடங்கினான்.

இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தி வரைந்த ஓவியங்களில் என்னை மறந்து அதிக நேரங்களை எடுத்து அதன் நிறம் உருவாக்குவது பற்றி மேலும் மேலும் உள்வாங்குகையில் அங்கிருந்து நகர இயலாமல் நகர்ந்து வந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் வண்ணம் தயாரிக்க பொறுக்கி வைத்த முருங்கைப் பசைகளை இனியேனும் கையிலெடுத்து நிறமிகளோடு விளையாட வேண்டுமென உள்ளம் குறுகுறுக்கிறது.