ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

கொல்லைக்கி போனியா குத்தைக்கெடுக்க போனியால

மகனுக்கு ஹிந்தி சொல்லிக்கொடுக்க ஏதேனும் செயலி (APPLICATION) இருக்குமா என அக்காவிடமிருந்து ஒரு கேள்வி. தேடிப்பார்க்கிறேன் எனக்கூறினேன். அவனுக்கு இப்போது ஐந்து வயது ஆங்கில வழிக் கல்வி பயில சென்று வருகிறான். மொழி எதற்காக கற்கிறோம் என்று அறியாத சிறு உள்ளம். இப்போதே மூன்றாவது மொழியை கற்பிக்கிறார்கள், இதை கற்பிப்பது எனக்கூறலாமா என்றே புரியவில்லை. நான் பள்ளியில் படித்தபோது (தமிழ் வழிக் கல்வி) இரண்டாம் வகுப்பில் ஏ.பி.சி.டி சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் அதன் தொடர்ச்சியாக மூன்றாம் வகுப்பிலிருந்து பாடங்கள் ஆரம்பிக்கும், எனக்கு நினைவேயில்லை என்ன படித்தேனென்று ஏ.பி.சி.டி யை தவிர்த்து. அந்த இரண்டாவது மொழியே கசப்பாகத்தானிருந்தது இன்றும் அப்படித்தான் இருக்கிறது.


ஒருநாள் மாலை வீட்டிற்கு வந்தவனிடம் படம் வரைவோமா என்று கேட்டதுமே சரியென்று கட்டிலிலிருந்து இறங்கிவிட்டான். நானும் பென்சில் வெள்ளைத்தாள் சகிதம் தரையில் அமர்ந்து விட்டேன். வீட்டின் மத்திய அறையில் இருக்கும் தொலைக்காட்சி
மேசையை தேர்ந்தெடுத்து வரையத் தொடங்கினோம். இடையிடையே அவன் வரைந்த ஒவ்வொரு கோட்டிற்கும் அவனால் விளக்கம் கொடுக்க முடிந்தது. ஒலிப்பெருக்கியில் இருக்கும் பித்தானை வெளியே தனியாக வரைந்திருந்தான். ஏனென்று கேட்டதற்கு “அங்க இடமில்லல்ல.. அதான் “ என்று சிரித்தான்.


இவன் நன்றாக பேசுகிறான், பேசுவதற்கான வார்த்தைகளை பள்ளியிலிருந்து பெறுவதை விட வீட்டில் அவனது கேள்விக்கு அப்பா அம்மாவின் பதில்களிலிருந்து கிடக்கும் வார்த்தைகளை மிக ஆழமாக மனதில் உள்வாங்கிக் கொள்கிறான், தேவையான இடங்களில் அந்த வார்த்தைகளையே பயன்படுத்துகிறான். ஏனென்றால் ஆங்கிலவழி பள்ளி அங்கு தமிழ் பேசுவது சாத்தியமில்லாத ஒன்று. மேலும் இந்த ஆங்கில அல்லது வேற்று மொழி வார்த்தைகள் இவனை களைப்படையச் செய்து குழப்பத்திற்கு வழிகோலும். வீட்டிலும் வெளியிலும் ஒரு மொழி பள்ளியில் ஒரு மொழி குழப்பத்தானே செய்யும்.


பிள்ளையை எப்பாடுபட்டாவது பலர் ஆயிரங்களையும் சிலர் லட்சங்களையும் வீணடித்து பள்ளிக்கு அனுப்புகிறார்கள். இப்பொழுதெல்லாம் குழந்தை தவழ்வதிலிருந்து எழுந்து காலூன்றி நின்ற உடனேயே ப்ளே ஸ்கூல் எனும் பாறாங்கல்லில் மோத வைக்கிறார்கள். இதில் பெருமை வேறு? சாராயம் குடிப்பதில், பெண்கள் பின்னால் சுற்றுவதில், பாதி வருமானத்தை மருத்துவனிடம் கொடுத்து விட்டு கிடைத்த அறிவுரைகளை பேசுவதில் ? எதில்தான் நமக்கு பெருமையில்லை, வீட்டுக்கு அருகில் காலியிடமிருந்தால் அங்கே குப்பை கொட்டுவதில் கூட பெருமை. ப்ளே ஸ்கூல் எனும் நரகம் கிரமங்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறது என்பது குழந்தைகள் மீது நாம் செய்யும் வன்முறையின் உச்சம்.


குழந்தைகளை விளையாட அனுப்புவதில் ஏன் தயங்க வேண்டும். நானெல்லாம் கல்லூரிப் படிப்பு முடிக்கும் வரை விளையாடியிருக்கிறேன், நம்மில் பெரும்பாலானோர் அப்படித்தான். விளையாட்டுகள் மாறிக்கொண்டே இருந்தாலும் விளையாட்டு என்பது மாறியதே இல்லை. பள்ளிப் படிப்பு முடிக்கும் வரை கோலி, செல்லாங்குச்சி, பிள்ளத்தள்ளி, நாடுபிடித்தல், கண்ணான், கபடி. வீடு, கடை கட்டுதல், சமையல் போன்ற வாழ்க்கை விளையாட்டுகள் இன்னும் எத்தனையோ உண்டு. காலையில் கொல்லைக்கிருக்க (கக்கா இருக்க) போனாலும் விளையாட்டுத்தான். சமீபத்தில் ஊருக்கு சென்ற போது பிங்காட்டை (கக்கா இருக்குமிடம்) கடந்து போய் கொண்டிருந்தேன், ஏழு பேர் கொண்ட சிறுவர்கள் குழு வட்டமாக அமர்ந்து வெளிக்கி போய்க் கொண்டிருந்தார்கள். எனக்கு என் பால்யத்தில் என்னோடு வட்டம் கட்டி இருந்த அத்தனைபேரும் சில நொடியில் நினைவில் வந்து போனார்கள், சிரித்துக்கொண்டே கடந்து போனேன். நேரம் போவது தெரியாமல் இப்படி இருந்துவிட்டு வீட்டுக்குப் போனால் “கொல்லைக்கி போனியா குத்தைக்கெடுக்க போனியால” என்று கேட்கும் அம்மாவின் குரலும் புன்னகையை தக்கவைத்துக் கொண்டது.  விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் மட்டும்தான் என்றும் மாறிப்போனது பிறகு. இப்போது எதுவுமில்லாமல் மூன்று வயதிலேயே மூச்சி முட்ட பாடச்சுமைகள் ?.


கடவுளை பற்றியும் சாமி கும்பிடுவதைப் பற்றியும் அவர்களுடைய அறிவுக்கெட்டிய வரை போதித்த பெற்றவர்கள் நினைத்தால் பிள்ளைக்கு எதையும் கற்றுக் கொடுக்க முடியும். ஆனால் இதனை சாத்தியமாக்க பெரும்பாலானோர் முன்வருவதில்லை. ஏனென்றால் அவர்கள் கற்றுக்கொண்டு அறிவை வளர்த்துக் கொள்ளவோ, இல்லை பணியின் காரணமாகவோ விருப்பமில்லாமல் இருக்கிறார்கள், அறிவற்ற ஒரு சூழலில் பிள்ளை கேட்கும் சிறுசிறு கேள்வி கூட இவர்களை பொறாமை கிணற்றுக்குள் விழச் செய்கிறது. இதனால் இப்படியான கேள்விகளை தவிர்ப்பதற்காகவே குழந்தைகளை திட்டுவதும் அவர்களுக்கு எதிரான வன்முறையை உருவாக்கவும் வழி செய்கிறது.


கற்றுக் கொண்டிருக்கும் ஆசிரியரை விட கற்றுக் கொண்டிருக்கும் பெற்றோர்களின் தேவை அதிகம்.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

சரியான கவலை. சமீபத்தில் நான் தி ஹிந்து தமிழ் நாளிதழில் கூட படித்தேன் பெருகி வரும் play schools பற்றி. எல்லா மொழிகளையும் கற்றுத் தரலாம் தவறில்லை. அது எந்த அளவிற்கு கற்றுத் தர வேண்டும் என்று புரிந்து கொண்டால் போதும். விளையாட்டு முக்கியம். நல்ல பதிவு. ரசித்தேன்//ப்ளே ஸ்கூல் எனும் நரகம் கிரமங்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறது என்பது குழந்தைகள் மீது நாம் செய்யும் வன்முறையின் உச்சம். //

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

அருமையான கருத்தை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai சொன்னது…


வணக்கம் நண்பரே குழந்தைகளை சிறு வயதிலேயே பள்ளியில் சேர்ப்பது எல்லோருக்கும் பெருமையாக இருக்கின்றது அவர்களை கொஞச காலமாவது உலகை மறந்து விளையாட விடவேண்டும் இதை அரசும் முன்வரவேண்டும் நல்ல பதிவு நண்பரே... வாழ்த்துகள்

'பரிவை' சே.குமார் சொன்னது…

இன்று ரெண்டு வயசானாலே பள்ளிக்கு அனுப்பி அவனை டாக்டராக்கவும் இஞ்சினியர் ஆக்கவும் உழைக்கும் பெற்றோர் அவர்களை கொஞ்ச நாள் விளையாட விட்டு, அதை தாங்களும் ரசித்து வாழ வைத்தால் பின்னாளில் நினைத்த வாழ்க்கையை அவன் அடைவான்... எதற்காக சிறுவயதில் சுமையைத் தூக்கி வைக்கணும் என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்... பிளே ஸ்கூல்கள் அந்த வேலையைச் செய்தாலும் அதெல்லாம் பணம் பார்க்கும் இடமே... அரசு இதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும்....

நல்ல பகிர்வு நண்பரே...