மூத்தவள் (ஜெபரத்திகா) நடக்க ஆரம்பிக்கும் முன்னால் நெஞ்சின் மீது படுத்துக்கொண்டு அணில் போல என் கண்களை அவதானிப்பாள், சிரித்தால் அவள் வெடித்துச் சிரிப்பாள். கி.ரா-வின் தாத்தா சொன்ன கதைகள் (தலைப்பு சரியாக நினைவில் இல்லை அதோடு இப்புத்தகம் இப்போது யாரிடம் உள்ளது என்றும் நினைவில்லை) என்ற புத்தகத்தில் மொச்சைக் கொட்டையின் வயிறு வெடிப்பது போல் ஒரு கதையின் காட்சி வரும், அதைச் சொல்லி "ட்டமார்" னு வெடிச்சிட்டுன்னு சொன்னால், உரத்தச் சிரிப்பொலி கேட்கும், பொக்கை வாய் சிரிப்பு.
வேலை முடித்து வீடடைய பத்தரைக்கு மேல் ஆகிவிடுமென்பதால், அப்போதெல்லாம் பெரும்பாலான நாட்கள் உறங்கிவிடுவாள், பள்ளி செல்லும் நாட்களில் மட்டும். அதற்குமுன் அதாவது பள்ளியில் சேரும் முன், சில இரவுகள் பன்னிரண்டு மணிவரைக்கும் நீளும் கதையாடலும் விளையாட்டுமாக, இப்போது இரு மாதமாக தொடர்ந்து வீட்டிலிருந்து பணி செய்வதால் ஒன்பதரை மணிக்குப் பாய் விரித்துவிடுவது வழக்கமாகி விட்டது.
ஒவ்வொரு நாளும் கதைப் பேச்சிற்கு பிறகே உறக்கம் என ஆகிவிட்டது, இளையவளும் (இயல்) இந்த கதைப் பொழுதில் இணைந்துவிட்டாள் வெகு இயல்பாக இவளின் பெயருக்கேற்ப, குழந்தைகளுக்கென வாங்கிய புத்தகங்கள் பெரும்பாலானவை அதன் முகமிழந்து, பின் கை கால் என அத்தனை அங்கங்களும் அற்றுப் போயின இவள்களின் சாகசத்தால், எஞ்சியது குன்றத்தூர் பாவேந்த பள்ளியின் சில புத்தகங்கள், அவை வண்ணமும் கிறுக்கலும் பெற்று கிழிதலிலும் தோற்கவில்லை. மிஞ்சியவை சில கதைப்படங்களும் பாடல்களும்.
சில கதைகளை நானே உருவாக்கி நேரத்திற்கேற்ப கதையை நீட்டி முழக்குவேன், சலிப்பு தட்டிவிடும் பொழுதில் முதல் காட்சியை நானும் அடுத்த காட்சியை அவளுமாக மாற்றி மாற்றி உருவாக்குவோம், இந்த மாதிரியான கதை உருவாக்கலுக்கு முன் ஓரிரு குட்டிக் கதைகளை அவளுக்கு பரிசளிக்க வேண்டும், (சமயத்தில் குட்டிக் கதைகளினூடே தூக்கம் அவளை அள்ளி அணைத்துக் கொள்ளும்). அதற்கு சிறுவர்களுக்கான எழுத்தாளர் விழியன் "வாட்சப் (புலனம்)" வழியே நாள் தோறும் பதிவிடும் கதைகளையும், பாவேந்தர் பள்ளியின் முதல்வரும் கதைசொல்லியுமான ஐயா வெற்றிச்செழியன் அவர்களின் கதையாடல் வலையொளித் (யூ ட்யூப்) தொடரில் சொல்லப்படும் கதைகளையும் வாசித்தும் கேட்டும் மகள்களிடம் கடத்துகிறேன்.
இரண்டு நாட்களாக ரத்திகா கேட்கிறாள் "அப்பா இந்த சிங்கங்கத மாட்டுக்கத மீன்கத அப்றோம் காக்கா கதல்லாம் எங்கப்பா படிச்ச"
"புத்தகத்துல தாம்டே படிச்சேன்"
"எனக்கு காமியேன்"
"அது செல்லுல இருக்குமா, கடையெல்லாம் துறந்தொடனே புத்தகமா வாங்கித்தாரேன் சரியா, இதுல எழுத்தா இருக்கு பாரு, படமே இல்ல, ச்சீ" என்று செல்லை நீட்டியதும் சிரித்துக்கொண்டே ஓடினாள்.
அப்போ இவள்கள் செல்பேசியில் எதுவுமே பார்ப்பதில்லையா எனக் கேட்டால் அதுவும் உண்டு, அதற்கான அடாவடித்தனங்களுமுண்டு.
@
எழுத்தாளர் விழியனின் கதைகளை தினமும் வாசிக்க, உங்கள் பெயர் மற்றும் ஊர் உடன் ஒரு வாட்சப் தகவலை "90940 09092" எண்ணுக்கு அனுப்புங்கள். கதைகள் கொட்டும்.
ஐயா வெற்றிச் செழியன் அவர்ளுடைய கதையாடல் தொகுப்பில் இதுவரை இருபத்தியாறு கதைகள் வந்துவிட்டது, அதற்காக சொடுக்குங்கள் https://www.youtube.com/playlist?list=PLh6l104YXvxLkFyFG3NECtykhyqX99DgU
கதைகள் ஒலிக்கட்டும்
2 கருத்துகள்:
கதையாடல்... அருமை...
மிக்க நன்றி
கருத்துரையிடுக