சனி, 24 அக்டோபர், 2015

ட்ராயிங் வெளாடலாமா

வந்ததும் “மாமா ட்ராயிங் வெளாடலாமா” ன்னான், அவன் வரைவதென்பதை விளையாட்டாகவே கருதி வருகிறான். வெளியிலிருந்தால் திறன்பேசியில் வரைவதும், வீட்டிலிருந்தால் கரிக்கோல் மற்றும் வெள்ளைக் காகிதம் கொண்டும் அமர்ந்துவிடுவான். நெடுநாள் கழித்து இன்று வீட்டுக்கு வேறொரு
நோக்கில் வந்தவன் அப்படிக் கேட்டான். கரிக்கோலும் காகிதமும் கொடுத்து வரையச் இல்லை விளையாடச் சொன்னேன்.


நடு அறையில் தொலைக்காட்சியின் முன் சென்று அமர்ந்து கொண்டு வரையத்தொடங்கினான். எனது வேலையை முடித்துவிட்டு அறையில் வந்தமர்ந்து அருகில் அழைத்துக்கொண்டேன். காகிதத்தை பார்த்தபோது அதில் ஒரு வீடு உருவாகியிருந்தது.

“யாரு வீடு இது” கேட்டதும்
“எங்க வீடு தான்” என்றான்.
“இது என்ன வீட்டுக்கு முன்னால எதோ ஒடுது”
“அதா..அது..ஆது” என்றான்
“ஆறா.. சரி சரி வர” என்றதும். தொடர்ந்து கோடுகள் வரையப்பட்டன காகிதத்தில்.

ஆறு வயதாகும் இவனது மனதில் பதிந்திருக்கும் அன்றாட காட்சிகளை சிறு சிறு விளக்கங்களோடு வரைந்து கொண்டேயிருந்தான். அவனின் வீட்டின் முன்னால் ஆறு ஓடுகிறது, அதனை கடந்து போக பாலம் இருக்கிறது, இவையெல்லாம் நிசத்தில் இல்லாமல் அவனது கற்பனையில் தோன்றியவையே. வீட்டிற்கு பின்னால் மலையும் அதன் பின்னால் கண் மற்றும் வாய் கொண்ட சிரிக்கும் கதிரவன். எவ்வளவு நுட்பமாக கவனிக்கவும் கற்பனை செய்யவும் முடிகிறது என்று நினைத்துக் கொண்டிருந்த்தேன்.

இந்த படத்தில் வீட்டிற்கு அருகிலேயே பள்ளியிருக்கிறது பள்ளிக்கு செல்லும் சாலை கல்லாலும் மண்ணாலும் ஆனது இது நிசத்திலும் அப்படித்தான் உள்ளது. அதை கவனித்து அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறான். “ ஸ்கூலுக்கு டூ வேய்ஸ்ல போலாம்.. டூ வேய்ஸும் இப்டித்தா இருக்கும்” என்று வட்ட வட்ட கற்களை பள்ளியை சுற்றி அடுக்கும் போது அவன் தலையை தடவி விட்டேன். பள்ளிக்கும் வீட்டுக்கும் தொடர்வண்டிச் சாலை போட்டிருப்பது அவனுக்கு கூடுதல் மகிழ்ச்சி. “செடி எப்டி வரைவது” எனக்கேட்டு அவனாக சில கோடுகளை வீட்டுக்கு அருகில் நெருக்கமாக வரைந்து கொண்டான். இந்த கோடுகள் அழகியல் பெறாவிட்டாலும் அர்த்தங்களோடு வளர்ந்து நிற்கின்றன.

பள்ளிக்கு பின்னால் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் சறுக்கி விளையாடும் பலகைகள் இருக்கும் போல அதை வரைந்து கொண்டே “ மாமா இது சர்க்கஸ் இங்க கேர்ல் வெளாடுவாங்க.. இதுல.. பாய்ஸ் வெளாடுவாங்க” என்று சறுக்கு பலகையின் மீது குழந்தைகள் சறுக்குவதுபோல் படம் வரைந்து கொண்டான். இரண்டு பலகையில் மூன்று மூன்று குழந்தைகளை வரைந்தவன், ஒரு பலகையில் மட்டும் ஒரு குழந்தையை வரைந்துவிட்டு “ இந்த கேர்ல் மட்டும் தனியா வெளாடுது” என்றான். இப்படி ஒரு காட்சியை பள்ளியில் பார்த்திருப்பான் என்றே நினைக்கிறேன். அந்த பெண் குழந்தை தனியாக விளையாடுகிறது என்று கூறியதும் இவனது அவதானிப்பை நினைத்து நெகிழ்ந்தேன்.
“ஆமா… சறுக்கி வெளையாடும்போது தரையில மண்ணு கெடக்குமா” எனக் கேட்டேன்
“ அ..மா… கெடக்கும்” என்று கூறிக்கொண்டே சில நெருக்கமான கோடுகளை மண்ணாக உருமாற்றினான். இதை முடித்த பின்னர் பள்ளி வாசல் முன் ஒரு உருவ பொம்மையை வரைந்து “இது வாச்மேன்” என்றான்.

ஆறு வரைந்தது இவனது கற்பனை என்று அறிந்திருந்தாலும், அது உருவான விதத்தை அறிந்து கொள்ளும் பேராசையில் கேட்டேன் “ உங்க வீட்டு முன்னாலதான் ஆறே இல்லியே.. அத எப்படி படத்துல வரஞ்ச”

“அது யேன் கனவுல வந்துதா .. அதான் வரிஞ்சேன் “ என்று பதிலளித்தான். ஆச்சரியமாகத்தானிருந்தது, இவன் தினமும் கண்களில் காணும் மனிதர்களை, கட்டிடங்களை, சாலையை, செடியை, கனவில் காணும் ஆறு, பாலம் என்று கலந்த ஒரு யதார்த்த அழகியலை உருவாக்கியிருந்தது.

இந்த சாலையில் இரண்டு விதம் ஒன்று தார் மற்றொன்று கற் சாலை. தார் சாலையை கவனித்தோமானால் அதை பிரிக்கும் இரண்டு கோடுகளும் போட்டிருக்கின்றான் எத்தனை கவனம் இச்சிறு வயதில்,

எல்லாம் முடிந்ததும் “அம்மாகிட்ட காமிக்கணும்” னு கோடுகள் நிறைந்த காகிதத்தை எடுத்துக்கொண்டு கிளம்பத் தயாரானான். போனவன் திரும்ப வந்து “என்னோட நேம் எழுதுறேன்” என கரிக்கோல் கொண்டு ஆங்கிலத்தில் அவன் பெயரை எழுதிக்கொண்டான்.

“இரு நான் ஒரு படம் பிடிச்சிக்கிறேன்” என்றேன்.
“படம் புடிச்சி என்ன செய்வீங்க”
நான் அவனைப் பார்த்து சிரித்தேன். அவனும் சிரித்துக் கொண்டே ஓடிப்போனான்.




1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

படம் பிடிச்சி என்ன பண்ணுவீங்க...
பையனின் கேள்விக்கு சொல்ல வேண்டியதுதானே , ஒரு பதிவு தேறிடுச்சு... முகநூலுக்கு ஒரு பகிர்வு தேறிடுச்சின்னு...
அருமையான பகிர்வு...
பையனுக்கு வாழ்த்துக்கள்.