திங்கள், 20 மே, 2019

ஓவியம் பழகுதல்


சித்திரமும் கைப்பழக்கம் என சும்மா திண்ணையில் உக்காந்து யாரும் சொல்லிவிடவில்லை என்பது உண்மையாகிக் கொண்டிருக்கிறது. ஏனோ தானோவென கோடுகளை வளைத்தும் குறுக்கியும், நிழல் பொருத்தி முப்பரிமாணத்தை முகத்தில் கொண்டுவர முயன்று கொண்டிருக்கும் போதுதான் முகநூலில் எனது படங்களை கவனித்து வந்த ஓவியர் பார்த்திபன் தொலைபேசியில் அழைத்து, ஒரு படம் வரைய முதற்கோடுகள் எவ்வளவு முக்கியமென விவரித்து பயிற்சிக்கான முதல் முறையையும் புரிய வைத்தார். 

கட்டங்கள் அமைத்து அதனுள் படத்தினை வரைந்து பழகுவதில் எனக்கு விருப்பமில்லாமலேயே இருந்து வந்தது. பள்ளியில் படிக்கும் காலத்தில் பத்திரிக்கையில் வரும் ஓவிய பயிற்று முறைகளில் ஒன்றான இந்த கட்டம் அமைத்து வரைதல் மூலம் சிவாஜி கணேசனையும் (அப்பாவுக்கு பிடித்தமான நடிகர்) நாட்காட்டியிலிருந்த முருகன் படத்தையும் வரைந்தது நினைவில் வந்தது. இவர் வரையச் சொன்ன முறையும் அதே போன்றதுதான் என்றாலும், இத்தனை ஆண்டுக்குப் பின்னர் அதனை முயற்சித்துப் பார்க்கலாமென்ற எண்ணம் உருவானது. காகிதத்தில் கரிக்கோலும் அளவுகோலும் கொண்டு கட்டம் வரைந்து விடலாம். கணினியிலும் திறன்பேசியிலுமுள்ள ஒளிப்படத்தின் மீது எப்படி கட்டங்கள் இடுவது என சிந்தித்தபோது நாகா எனும் ஓவியர் முகநூலில் பரிந்துரைத்த “Artist Grid” எனும் செயலியை தரவிறக்கம் செய்து, கட்டங்களை படங்கள் மீது உருவாக்க முடிந்தது.

இந்த கட்டங்கள் அமைத்து முதற்கோடுகள் எளிதாக வரைய முடிந்தாலும், அடுத்தகட்டமாக அதற்குள் நிழல் உருவாக்குவதில்தான் சிக்கல் எழுந்தது, எனக்கிருக்கும் பொறுமை காணாது என உணர வைத்தது அத்தருணங்களே. ஒரே நாளில் வரைந்து முடிக்க வேண்டுமென எண்ணினால் நாம் எதிர்பார்க்கக் கூடிய அளவு திறன் வெளிப்படாது, மெல்ல மெல்ல செதுக்கிக் கொண்டு வரவேண்டும், மேலும் கணினியிலோ திறன்பேசியிலோ பார்த்து வரைவதை விட, காகிதத்தில் படத்தினை அச்சிட்டு, அதில் கட்டங்கள் அமைத்து வரையப் பழகினால் இன்னும் படத்தில்அழகு கூடும் என முதல் மூன்று படங்களைப் பார்த்து விமர்சித்த ஓவியர் பார்த்திபன் கூறிய அடுத்த நாள்.  

டாலியின் மிகத்தெளிவான படம் ஒன்றை அச்செடுத்து கட்டமிட்டு வரையத் தொடங்கினேன், மூன்றாவதாக வரைந்த இப்படம்தான் என்னிடமிருந்த உழைப்பையும் பொறுமையையும் பெற்றுக் கொண்டு சிறப்பாக வெளிப்பட்டது, ஒவ்வொரு நாளும் கிடைக்கும் பொழுதில் கொஞ்சம் கொஞ்சமாக கீற்றுகளால் பட்டை தீட்டினேன். டாலி ஒளிர்ந்தார். வரைதல் முற்று பெற்றதும் ஒளிப்படத்துக்கும் ஓவியத்துக்குமான வேறுபாட்டை உணர்ந்து கொள்ள முடியாமல், ஒளிப்படத்தை கரிக்கோலால் காகிதத்தில் அச்செடுப்பதா ஓவியனுக்கான முறை என எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதில் இக்குறிப்பு (https://pandianinpakkangal.blogspot.com/2017/11/Art-Speaks.html) மனதில் ஊடறுத்தது.

----தொடருவோம்.

4 கருத்துகள்:

Kasthuri Rengan சொன்னது…

பயன்மிக்க அனுபவ பகிர்வு
தொடர்வோம்

Pandiaraj Jebarathinam சொன்னது…

நன்றி🙏

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல குறிப்புகள்.

vimalanperali சொன்னது…

நல்ல கட்டுரை!