சனி, 27 டிசம்பர், 2025

நற்கீறல் - வெளியை வரைதல்

இந்த கிழமை நற்கீறல் ஓவியக் குழுவுடன் நேற்று காலையில் கொளப்பாக்கம் அகத்தீசுவரர் கோவிலின் வெளிப்புறத்தை வரைந்து பழகினோம்.




இடத்திற்கு சென்று சேர்வதற்கு பத்தரை மணி ஆகிவிட்டது குழந்தைகளை நாடகப் பயிற்சிக்காக பள்ளியில் விடுவதற்குச் சென்றதால் மேலும் மௌலிவாக்கம் பாய்கடை நிறுத்தம் அருகே சாலையோரமுள்ள கடைகளை அரசு இடித்துத்தள்ளும் வேலையில் மும்முரமாக இருந்ததால் போக்குவரத்து நெருக்கடி வேறு அதனால் ஓரளவு தான் வரைவதற்கு இயன்றது. 

சென்ற கிழமை திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயிலுக்கு சென்ற போது அங்குள்ள மண்டபத்தின் தூண்களும் அதில் உள்ள குதிரையும் குதிரை வீரனும் படிக்கட்டுகளும் அழகாக இருந்தது ஆனால் அவற்றை விட்டுவிட்டு மண்டபத்திற்கு மேலிருந்த தற்காலத்தில் உருவாக்கப்பட்ட வண்ணம் பூசிய சிலைகளையும் கட்டமைப்புகளையும் வரை தொடங்கி விட்டேன் பின் அதனை முடித்துவிட்டு கீழே மண்டபத்தை வரைய வரும்போது கோவில் கதவுகளை மூடுவதற்கு ஆயத்தம் ஆனார்கள். இதை பிழையாக உணர்ந்து கொண்டே வீடடைந்தேன். ஆனால் ஒவ்வொரு இடத்தையும் வரைவதை சோதனை அடிப்படையில் கற்றுக் கொள்வதற்கு இணங்கி தொடர்கிறேன்.

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

நற்கீறல் வரைவுகள்

ஒவ்வொரு கிழமையும் வெள்ளியன்று ஓவியர்கள் ஒன்றாக சென்னையிலுள்ள குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று வரைவது வழக்கம், எங்கள் குழுவிற்கு நற்கீறல் என்று பெயர்.


கீழுள்ள படங்கள் தூவல் கொண்டு இடங்களை அல்லது பொருட்களை நேரடியாகக் கவனித்து வரைந்தவை.

குன்றத்தூர் சேக்கிழார் இல்லம், இப்போது கோவிலாக உள்ளது

வள்ளுவர் கோட்டம் தேர்

கிண்டி சிறுவர் பூங்காவிலுள்ள மரம், என்ன மரம் என அறிந்து கொண்டு வந்திருக்க வேண்டுமென இப்பாது தோன்றுகிறது.

SARAA  ART CLASS-ல் மழையை எதிர் நோக்கிய ஒரு நாளில் ஓவியக் கூடத்தில் பொருட்களை கவனித்திருந்த போது
SARAA ART CLASS-ல் ஒரு மழை நாளில் புத்தரைக் கண்டபோது




வியாழன், 11 டிசம்பர், 2025

அக்கா குருவி 26

ஆலமரத்து நிழல்
அடிவயிற்றுப் பசி
அன்றாடப் பறவைக்கும் எனக்கும்
இடையில் ஒற்றைப்பருக்கை
சேர்ந்து பாடினோம்

கா...கா...கா
கா...கா...கா

சனி, 6 டிசம்பர், 2025

கடவுளின் பேழை

நம்முடைய தொலைபேசி அலைபேசி திறன்பேசி வங்கி இணையச் சேவைகள் அட்டைகள் போன்றவைகளின் கடவுச்சொல்லை நம்முடைய நினைவில் ஏந்திக் கொள்வது வழக்கம். ஒருசிலர் மட்டுமே நாட்குறிப்பிலோ வேறேதேனும் இடத்திலோ குறித்து வைத்துக் கொள்ளும் செயலைச் செய்வார்கள். இப்படி எழுதி வைப்பது ஒரு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும். தொடர்ந்து பயன்படுத்தாத எதுவும் மறந்தோ மறைந்தோ போவது இயற்கை, அதனால் எழுதி வைத்துக் கொள்வது நல்லது.

மேற்சொன்ன கருவிகள் பிழையின்றி இயங்குவதில் கணினியின் பங்கு அளப்பரியது. இந்த கணினிகளுக்கும் கடவுச்சொல் கட்டாயம் உண்டு என்பதை அறிவோம் அதிலும் பல வகைப்பட்டவை இருக்கின்றது. பயனர் தேவைக்கானவை தவிர்த்து கணினிக்கு முக்கியமான கடவுச்சொல்லாக நிர்வாகத்திற்கான கணக்கு உள்ளது. இந்தப் பொறுப்பாளர்கள் கணக்கிற்கான கடவுச்சொல்லை ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு கருதி புதுப்பிப்பது நடைமுறை. இந்தச் சூழலில் பொறுப்பாளர் எப்போதும் ஒரே ஆளாக இருப்பதில்லை என்பதால்  கடவுச்சொல்லை எல்லோரும் தேவையான பொழுதில் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக பொதுவான ஒரு செயலியில் சேமித்து வைக்கப்படும். இந்தச் செயலியும் அதன் பயன்பாடும் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். 

இன்று குன்றத்தூர் தெருக்களில் நடந்து கொண்டிருந்த போது ஒரு வீட்டின் வாசலில் "God's Ark" என்று கல்வெட்டில் எழுதியிருந்தது என்னடா இது Ark என்று உடனடியாக பொருள் தேடியதும் பேழை அல்லது பெட்டி என்று அறிந்துகொண்டேன். "CyberArk"  என்ற செயலியை கடவுச்சொல் சேமிப்பிற்கு பணி நோக்கில் பயன்படுத்தியிருந்தாலும் Ark என்ற சொல்லின் பொருள் அறிந்து கொள்ள இதற்கு முன் முயன்றதில்லை. கடவுளின் பேழைக்குள் வாழ்கிறார்கள்.

வெள்ளி, 5 டிசம்பர், 2025

அக்கா குருவி - 25

உடனடியும் தாமதமும்
பிடித்ததும் பிடிக்காததும்
பிறப்பும் இறப்பும்

இப்படிப் பல்கியிருக்கும் பலவற்றிற்கும் 
தனிமனித உணர்வில் இடமில்லை
என்று பித்து பிடித்த மனம்

நேரம் அறியா அதிகாலையில் புலம்பி
பின் உறங்கிய காலையில்

மணி ஏழாவுது
என்ற குரலில்
தன்னிலை உணர்ந்தது