செவ்வாய், 31 மார்ச், 2026

வதம் செய்வோம் வேங்கைகளே


எழுத்துக்களை விட ஓவியங்களின் வழியே வாசிக்கும் பொழுதில் தான் காமிக்ஸ் மேலும் ஆர்வமுள்ளதாகவும் தேடலுக்கு உரியதாகவும் மாற்றம் கொள்கிறது. இது ஜப்பானில் ஒரு சிற்றரசருக்கு கீழ் உள்ள சாமுராய் பற்றிய கதை.

டெட்சுவோவின் பயணத்தில் காடுகளும் மலைகளும் சமவெளிகளும் கோடுகளாக பயணிப்பது என்னையும் காட்சிக்குள் இழுத்துக் கொண்டது. முழுக்க முழுக்க கோட்டோவிய முறையில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்கள் உண்மையிலேயே மிரட்டுகின்றன. ஒவ்வொரு சட்டகத்தையும் பொறுமையாக உள்வாங்க உள்ளே கற்பனைக் கோடுகள் கட்டியணைக்கின்றன.

செவ்வாய், 24 மார்ச், 2026

கோத்திரம்

சில சாலையோரத்திலும் முச்சந்திகளிலும் வெகுவாக குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் கடவுளாகக் கருதப்படும் அனைத்து மதத்தின் முகங்கள் அல்லது குறியீடுகள் அச்சடிக்கப்பட்ட பதாகையை கட்டியோ ஒட்டியோ வைத்திருப்பார்கள் கூடவே இங்கே குப்பை கொட்டாதீர் சிறுநீர் கழிக்காதீர் என்ற சொற்றொடர்களும் எழுதியிருக்கும். 

நேற்று குன்றத்தூரில் உள்ள அம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தோம். வாசலுக்கு அருகில் இருந்த பூ விற்கும் அம்மா அர்ச்சனைக்கும் வாங்கிக்கம்மா என்றார் ஒவ்வொரு சொல்லுக்கும் அடுத்து அவர் சேர்த்துச் சொன்ன அம்...மா.. அம்...மா மிகுந்த கனிவாகவும் நாடகத் தன்மையுடனும் இருந்தது. பூ நூறும்...மா அர்ச்சனை நூறும்...மா மொத்தம் எரணூறும்...மா.

கோயில் மண்டபத்தில் நுழையும் போது ஒரு காலை மடக்கி மற்றொன்றை தொங்கவிட்டிருந்தவர் படபடப்புடன் அர்ச்சனையா என்றார். இவர்தான் பூசாரி போல என்று நினைக்க நேரம் தராமல் சீட்டு ஒன்றைக் கிழித்து நீட்டினார் ஐந்து ரூபாய் என்று தெளிவற்று காதில் விழுந்தது. 

உள்ளே பூசாரி இல்லை அர்ச்சகர் நின்றிருந்தார். மண்டபத்தில் ஒரு அம்மா புதுமணப்பெண் போல தலையில் வாழைப்பட்டையில் கட்டிய பூச்சரம் அணிந்து வழிபாடு நடத்திக் கொண்டிருந்தாள். அர்ச்சகர் எங்களிடம் என்ன கோத்திரம் என்று கேட்டார் எங்கள் இருவருக்கும் தெரியவில்லை என்றோம் உடனே சுப கோத்திரம் என்று மந்திரத்தை அவிழ்த்து விட்டார். வெளியில் வந்ததும் மாறி மாறி கேட்டுக் கொண்டோம் அப்படி என்றால் என்னவென்று, எனக்கு திருமணத்திற்குப் பிறகு தான் எனது ராசி பற்றியே தெரியும் என்றேன். 

காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் பேருந்தில் எழுதியிருந்தது "ஓம் ஶ்ரீ சாய்" இந்த முன்னொட்டுகளில் இன்னும் என்னவெல்லாம் சேருமோ. ஆமாம் கோத்திரம் என்றால் என்ன. கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நாளன்று இங்கே மணிகண்டன் நகரில் உள்ள கோவிலுக்குச் சென்றோம் அங்கிருந்த பூசாரி தமிழில் பாசுரங்கள் பாடியது இனிமையையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு முன்பு இப்படி ஓதுவார் ஓதிக் கேட்டதில்லை.

வியாழன், 19 மார்ச், 2026

அக்கா குருவி 30

கல் தேடும்
பயணத்தின் இடையில் 
பறந்து வந்ததை
விலக்கிய பின் 
தரை துளாவியதன்
சலிப்பில் 
விலக்கியதை ஓடிப்பிடித்து 
பையில் நிரப்பியதும் 
அலைச்சலின் மாலையில் 
தொடை கிழித்தது 

புதன், 18 மார்ச், 2026

அக்கா குருவி 29

ஓடும் கால்கள் 
குழந்தையை
கையில் ஏந்திய விரல்கள் 
ஈருருளியை
குடை சாய்க்கும் கைகள் 
இசை
பூட்டிய காதுகள் 
பறவை விரிக்கும் சிறகுகள்

சனி, 14 மார்ச், 2026

அக்கா குருவி 28

நீண்ட சாலை
நெடுந்தூரப் பயணி
வற்றிய நீர் குடுவை 
வெயில் 
காற்றைக் கடத்தும் மரம் 
நிழல் 

சனி, 28 பிப்ரவரி, 2026

அக்கா குருவி 27

யாரோ ஒருவர் 
தன் கை உயர்த்தி 
யாரோ ஒருவருக்கு அடையாளம் காட்ட
விரல் நோக்கிய 
திசையில்
அரச இலைகள்
கதையாடின

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

பட விளக்குகள்

அந்தப் பைஞ்சுதைச் சாலையில் சுண்ணாம்புக் கட்டியால் படம் வரைந்ததும். எங்கிருந்தோ வாங்கி வந்த நீள்வாக்கில் கிழிக்கப்பட்ட மூங்கில் மட்டைகளை வளைத்து வரைந்த படத்திற்கு ஏற்ற வகையில் கட்டுவார்கள் பின் அதன் மீது சின்னச் சின்ன இடைவெளியில் தொடர் விளக்குகளை பொருத்தி திருவிழாவிற்கு ஆயத்தமாவார்கள். ஆடி மாத விழாக்கள் மற்ற கோவில் விழாக்களில் இங்கே சென்னையில் ஆங்காங்கே இந்த வடிவமைப்புகளைக் கண்டாலும் கடந்த வாரம் மயானக் கொள்ளை விழாவிற்காக வைக்கப்பட்டிருந்தவற்றைக் பார்த்ததும் ஊரில் கிருஷ்ணா இசையகத்தில் இந்த வகை பட விளக்குகள் செய்வது நினைவில் ஓடியது.



புதன், 4 பிப்ரவரி, 2026

அக்கா குருவி 26

இலைகளுக்கு 
இடையிடையே வானம் 

வெயில் என்கிறது ஒரு குரல் 
வைட்டமின் டி என்கிறது மற்றொன்று 

ஒற்றைத் தாள் தேடுகிறது
கோடு

சனி, 31 ஜனவரி, 2026

நற்கீறல் - மணப்பாக்கம்




நற்கீறல் - பச்சைமலை

இயற்கையை ரசிக்கவோ அனுபவிக்கவோ கொண்டாடவோ வேண்டுமென்றால் அதனதன் போக்கில் வேடிக்கைப் பார்க்கலாம். அதே இயற்கையை உணர்வோடு உள்வாங்கவும் அதோடு கலந்து போகவும் அதனை ஓவியமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தோன்றுகிறது. அதிலுள்ள அசையும் தன்மையில் இன்றைய பொழுதையும் அசையாத வகைமையில் நேற்றையும் கோடுகளாக்கி அகம் மகிழ்வது நமக்கு உயிர் கொடுக்கும். ஒவ்வொருவரின் பார்வையும் வரையும் கோடுகளும் வேறு வேறு ஆனால் அடையும் உணர்வில் ஓவியத்துடன் ஒன்றிணைகிறோம்.

தாம்பரம் பச்சைமலையில் கடந்த வெள்ளிக்கிழமை நற்கீறல் நிகழ்வு நடைபெற்றது. நாங்கள் வரைந்து பழகினோம்.


சனி, 24 ஜனவரி, 2026

சாத்துக்குடி

தனித்துத் தொலைவிலிருந்து வருகையில் பேரூந்தோ ஈருருளியோ எதில் வந்தாலும் எங்கே சாப்பிடுவது என்ற நோக்கத்தில் உணவகத்தை நோட்டம் விட்டுக்கொண்டே வந்தால் வீடு வந்துவிடும். நண்பர்களோடு வெளியில் உணவருந்தும் போது இந்த கடையில் இதுதான் நல்லா இருக்கும் இதை இப்படி உண்டால் சுவையாக இருக்கும் என ஆணித்தரமாக சொல்வார்கள். எது சுவை என்றொரு கேள்வி எழும். எனக்குத் தெரிந்து உப்பு மற்றும் காரச்சுவை தவிர்த்து எதையும் சுவைக்க விடுவதில்லை நவீன உணவகங்கள்.

ஒருமுறை நண்பர் ஒருவர் அரத்தி (ஆப்பிள்) பழச்சாறு அருந்தினார் பக்கத்தில் இருந்தவர் விளையாட்டாக கொஞ்சம் கசப்பாக இருக்கிறது அல்லவா என்று கேட்டதும் ஆமாம் ஆமாம் என்று பரிமாறுபவரை அழைத்து சாற்றை மாற்றச் சொல்லி விட்டார். இவர் எதுவும் சொல்லாமல் இருந்திருந்தால் அவர் வெற்றுக் கோப்பையைத்தான் கீழே வைத்திருப்பார். இங்கே சுவை உணவில் இல்லாமல் இன்னொருவரின் கருத்துக்குள் புதைந்திருந்து வெளிப்பட்டுவிட்டது.

மும்பையில் தானா தொடர்வண்டி நிலையத்தில் இன் முள்ளங்கி (கேரட்) செங்கிழங்கு (பீட்ரூட்) சாறு எடுத்து இனிப்பு ஏதும் சேர்க்காமல் வாங்கிக் குடிக்கலாம். கண் முன்னே செய்து தருவார்கள். சில நாட்களாக அலுவலகம் செல்லும் ஆம்பிட் பூங்கா சாலையில் வட இந்தியர் நடத்தும் அப்படியொரு சாத்துக்குடி கடையில் ஒரு கோப்பை சாறு அருந்துவதும் அதன் தரமும் சுவையும் சிறப்பாக உள்ளது. இனி சுவை அறிய வேண்டும்.



ஞாயிறு, 18 ஜனவரி, 2026

நற்கீறல் - காஞ்சிபுரம் கோவில்

இந்த கிழமை நாங்கள் காஞ்சிபுரம் கோவில்களை வரைவதற்கு கிளம்பினோம்

வரதராச பெருமாள் கோவில் காட்சியை ஐந்து நிமிடத்தில் விரைவான கோடுகளால் வரைந்து பார்த்தேன்.


கோவிலின் முகப்பு கோபுரமும் தெப்பத்தின் நடுவிலுள்ள மண்டபமும்.



ஏகாம்பரநாதர் கோவில் நெடுங்கோபுரமும் அருகிலுள்ள சின்ன வீடும். நீரில்லா தெப்பத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து வரைந்தோம்.




புதன், 14 ஜனவரி, 2026

எத்தனை கோணம் எத்தனை பார்வை - ஓவியர் ஜெயகுமார்

தனது ஓவியப் பயணத்திற்கு எழுத்தாளர் ஜெயகாந்தனுடனான நட்பு எவ்வளவு உறுதுணையாக இருந்திருக்கிறது என்பதை ஓவியர் ஜெயகுமார் கட்டுரைகளில் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவதிலிருந்தே உணர்ந்துகொள்ள முடிகிறது. இவரது கோட்டோவியம் பற்றிய திறனாய்வுக் கட்டுரையில் ஏன் இவர் வண்ணங்களுக்கு வருவதற்கு இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டார் என்பதை எண்ணிப் புழுங்கும் கவிஞர் ரவி சுப்பிரமணியின் சொற்களில் தேங்கி நின்று அவரது ஓவியங்களை வாசித்துப் பார்த்தேன். ஓவியங்களில் ஊடாக ஓடிக் களிக்கும் கோடுகள் தான் வடிவங்களையும் அதை நோக்கும் பாதைகளையும் உள்வாங்க உதவுகிறது வண்ணங்கள் குறியீட்டுத் தன்மையுடன் வேறொரு பரிமாணத்தை நமக்கு வழங்குகிறது. 

ஊர்வலம் சிறுகதையில் ஒரு உவமை "தனது மனைவியின் உடம்பிலிருந்து அவளது உயிரை தனியே பிரித்து அகழ்ந்தெடுத்து அதையே ஒளியாக பக்கத்தே வைத்தது போல் தோன்றியது அவருக்கு" இதை வாசிக்கையில் இவரது கவிதை மனம் பயணம் செய்து லயிக்கும் திசையில் நடந்து பார்ப்பது அழகாக இருந்தது. இரண்டொருமுறை வாசித்தப் பிறகு "தனியே பிரித்து...அதையே" என்ற சொற்கள் அவ்விடத்தில் தேவையில்லையோ என்று எனக்குத் தோன்றியது. 

ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் "அன்று பெய்த மழையில்" திரைப்படத்தில் கலை இயக்குனராக உடன் இணைந்து பணியாற்றும் போது சில்க் சுமிதாவின் தன்னை தீவிரமாக விரும்பும் குணத்தை வெளிப்படுத்துவற்காக நடிகையை நேரடியாக பார்த்து வரைந்து படத்தில் பயன்படுத்தியதை அறிந்துகொண்டதும் அப்படத்தை வலையொளியில் (YouTube) தேடிப் பார்த்தால் இப்படியொரு வயது வந்தோருக்கான படம் வந்திருப்பதை கொஞ்சம் வியப்புடன் கண்டு கண் நகர்ந்தது அந்த ஓவியத்திற்கான தருணத்தைப் பார்த்ததும் நிறுத்திக் கோடுகளில் கண் பதித்தேன் வண்ணங்கள் தெளிவாக இல்லாததால் அதிக கவனம் செலுத்த இயலவில்லை. 

ஓவியர் திரு.ஜெயகுமார் அவர்களை சந்திக்கும் ஒவ்வொரு பொழுதும் படைப்பு உருவாக்கம் பற்றிய அறிதலுக்கான வழியையும் உள்ளார்ந்த ஆற்றலையும் பெற்றுக் கொண்டேயிருப்போம். இப்போது அவரது "எத்தனை கோணம் - எத்தனை பார்வை" நூலை வாசிக்கும் போது கலை சார்ந்து அவருக்குள் விளைந்த வகைமைகளை எண்ணிப் பார்ப்பதும் அதனை மூலமாகக் கொண்டு கணக்கற்று விரியும் நமது புரிதல் படிநிலைகளும் பேரனுபவமாக உள்ளது. தனது கலை நுட்பங்களை வெளிப்படுத்த அவர் இன்னும் பல நூல்கள் படைக்க வேண்டும்.

வெள்ளி, 2 ஜனவரி, 2026

நற்கீறல் - கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்

 இன்று நற்கீறல் ஓவிய நிகழ்விற்காக கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தில் கூடி வரைந்தோம்.