பம்பு அடித்து தண்ணீர் பொங்கிவரும் வேளைக்கான மூச்சிரைப்புடனான காத்திருப்பை வாசிக்கும் போதே, சென்னை வந்தபின் இரண்டு வருடங்கள் நண்பர்களுடன் தங்கியிருந்த அறை வாசம்தான் நினைவில் வழிந்தோடியது. பொதுவாக புதினம் அல்லது சிறுகதைகளை வாசிக்க நேரும்போது முதல்பக்கத்தை முடித்து அடுத்தப்பக்கம் திருப்புவதற்குள் வாழ்வின் நினைவுகளை அடுக்கத்தொடங்கினால் அதைவிட சிறந்த படைப்பொன்று இருந்துவிட முடியுமா. சாவதானமாக எண்ணங்களை ஓடவிட்டுவிட்டு தொடர்ந்து வாசித்தல் பேரின்பம்.
ஜமுனாவுக்கும் சாயாவுக்குமான உறவு, நீரின்றி வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு பணிக்குச் செல்லும் சாயா ஹாஸ்டலுக்கு போய்விடப்போவதாகக் கூறுபவள் ஒருநாள் சென்றும் விடுகிறாள். சினிமா ஆசையில் பாஸ்கர்ராவிடமும் படத்தயாரிப்பாளர்களிடமும் உடலை காட்சிக்கு வைப்பவளாகவும் குழாயடியில் நீருக்கு காத்திருக்கையில் மனித உணர்ச்சிகளில் அதுவொன்று மட்டும் மேலோங்கிய கண்களை வெறுப்பவளாகவும், தங்கை சாயா இல்லாத வேளையை தனிமையை விரும்பாத தற்கொலை செய்யத்துணிபவளாகவும் புதினத்தில் முதன்மை காரணியாக வருகிறாள் ஜமுனா.
அதிகாரிகளின் அலட்சியங்களை காட்சிப்படுத்தும் உரையாடல்கள் அன்றும் இன்றும் மாறாத பிணக்குகள்.
டீச்சரம்மாவிடம் அழுது புலம்பும்பும் போது அவள் தன்கதையை ஜமுனாவிடம் கூறி ஆறுதல் மொழியும் இடம் பெண்களின் வாழ்வை எங்கனம் கேள்விக்குறியாக்கி விடுகிறது சமூகம் என்பதை மறுப்பதற்கில்லை, அதுவும் பிராமணப்பெண்கள். டீச்சரம்மாவின் கல்யாணக்கதை கேட்கையில் உள்ளம் பதறித்தான் போகிறது. ஒருமுறை ஜமுனா அவள் வீட்டிற்கு போகும்பொழுதில் அங்கிருக்கும் இருமல் கிழவரும் பொய்யாக உறங்கும் கிழவியும் அவளது மாமனார் மாமியாராகத்தான் எண்ணத்தோன்றியது, பின்னால் அவள் கதை கேட்கையில் ஏற்படும் அதிர்வு மனதை குலுக்குகிறது. பதினைந்து வயது குழந்தையை நாற்பத்தந்து வயது நரை கிழத்திற்கு மணம் முடித்தால்?
ஜமுனாவும் சாயாவும் அவர்கள் அம்மாவை காணச்செல்லும் போது அவர்களை வெளியே போ வெளியே போ என விரட்டும் பாட்டியான கிழவிக்கும் டீச்சரம்மா வீட்டில் ஜமுனாவை வெளியே போ வெளியே போ என விரட்டும் மாமியார் கிழவியாக்கும், "கடந்தவாரம் ஓவியச்சந்தை பார்க்கச்சென்ற போது மைலாப்பூர் நிறுத்தத்தில் சில நிமிடங்கள் காத்திருக்கவேண்டியிருந்தது. அப்போது அங்கிருந்த பாட்டியொன்று பொம்பளையளெல்லாம் இந்து தர்மத்தின் படிதான் வாழனும் இல்லைன்னா அதுங்கல்லாம் எதுக்கு வாழனும் என அருகிலிருப்பவரிடம் கத்திக்கொண்டிருந்தது. அவன் ஆமாம் வெட்டிப்புடணும் என்றான்." இம்மூன்று கிழமும் ஒத்துப்போக இடமிருப்பதாகவே தெரிகிறது. புதினம் என்பது வெறும் புனைவல்ல.
மழைக்குப் பின் பம்பில் வரும் சாக்கடை நீரும், சேற்றில் சிக்கிக்கொண்ட காருடன் பாஸ்கர்ராவும், மூன்றுமாத கர்ப்பத்துடன் ஜமுனாவும் இப்புதினத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தாகம் குட்டிக்கதை
1 கருத்து:
நல்ல பதிவு பாராட்டுகள்
கருத்துரையிடுக