வியாழன், 26 நவம்பர், 2026

விதை தாண்டிய இலைகள்

எழுத்தாளர் கறு.ஆறுமுகத்தமிழனின் கட்டுரைகளை வாசிப்பது தமிழ் மெய்யியல் பற்றி தேடுவதற்கான விதை போன்றது. இக்காலத்திற்கு பழந்தமிழை இழுத்துவந்து தனது எள்ளலான மொழியில் விளக்குவதும் அழகியல். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்து தமிழ் திசையில் வெளியான அவரது "முத்தம் கடந்து வாழ்வார்" கட்டுரையில் சித்தர் பாடலில் இருந்து உவமையைக் கடன்வாங்கி அரசியல்வாதியொருவர் எடுத்துக் கூறியதை சுட்டிக்காட்டி எள்ளி நகையாடியதை படித்ததும் சிரிப்பு வந்துவிட்டது. 

கடந்த புதன்கிழமை அன்று அலுவலகத்தில் "சந்தா ஓ சந்தா" என்ற பாடலை ஒலிக்க விட்டிருந்தார் நண்பர். அதில் ஒருசில வரிகளை இந்த சில நாட்களில் முணுமுணுத்துக் கொண்டிருந்தாலும் மீண்டும் கேட்கும் ஆவல் எழவில்லை. சந்தா என்ற சொல்லை வெறுமனே பாடல் கவர்ச்சிக்காக சொருகியிருப்பாரா அந்தக் கவிஞர் என்ற எண்ணம் ஓடியது அத்தோடு நில்லாமல் அந்த இடத்தில் நிலவே ஓ நிலவே என்று அமைத்திருந்தால் பாடல் வேறு திசையில் சென்றிருக்கும் அந்த ஒலிப்பில் அடுத்தடுத்த சொற்களும் மாறி எப்படி உருவாகியிருக்கும் என்று மனம் அலைந்தது கூடவே நிலவை வைத்து பாடப்பட்ட சில பாடல்கள் உட்புகுந்தது. கவிஞர் யார் என்று பார்த்தால் வைரமுத்து.

பாடலை இதற்குமுன் கேட்டிருந்தாலும் சொற்களைக் கவனித்ததாக நினைவில்லை இப்போது கேட்ட போது உவமை ரசிக்கும் தன்மையில் இருந்ததால் செவி கொடுத்தேன். ஆணின் இனம் கிளை மாதிரி; பெண்ணின் இனம் வேர் மாதிரி; கிளை பேசினால் ஊர் கேட்குமே; வேர் பேசினால் யார் கேட்பது;......;விதை தாண்டி வந்த இலைகள் விதைக்குள் மீண்டும் போகாது;.. என காதில் விழுந்ததும் அறியாமல் அப்பப்பா என்று குரலெழுப்பிவிட்டேன், எல்லோரும் ஆளாளுக்கு ஒன்று சொல்லி பின்னர் அந்தச் சூழல் அமைதியானது.

இதில் இறுதியாக வரும் வரியின் மூல வடிவம் எழுத்தாளர் மேற்கோள் காட்டிய சித்தர் பாடலில் வருகிறது, சொற்கள் மட்டும் மாற்றிப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்ததும் அட என்று எண்ணி மனம் சிரித்தது.

"கறந்த பால் மறுபடியும் மடியிலே புகாது; கருவாடு மறுபடியும் மீன் ஆகாது"

கருத்துகள் இல்லை: