9:55 இருக்கும் ஞாயிறன்று யாருமில்லா அரைவட்ட திறந்தவெளி அரங்கினைக் கடந்து சென்று, அமர்ந்து வரைய தோதான இடம் தேடிய பொழுதில் உதட்டை மென்று கொண்டிருந்த ஜோடியொன்று கண்ணில் பட்டது, ஓரிரு அலை கோடுகளை மனதில் கிறுக்கிவிட்டு மணிக்கூண்டு அருகேயிருந்த இருக்கையில் செல்லில் எதையோ வெறித்துக் கொண்டிருந்த சிறுவனின் எதிர் பக்கமாக சென்று அமர்ந்தேன். இலைகளற்ற காய்ந்த காய்கள் தொங்கிக் கொண்டிருந்த மரம், தன்னை வரையச் சொல்வதுபோல் இருந்தது, மெல்ல சிரிக்க முயற்சித்த போது ஏதோவொரு பெயரைக் கூறி இருமுறை உரக்க அழைத்தபின் அச்சிறுவன் தலையை நிமிர்த்தியதும் இன்னொரு சுற்று போய் வருகிறேன் எனக் கூறி நகர்ந்தது அக்குரல், தலையை ஆட்டிவிட்டு தன் நிலையை அடைந்தான் இவன்.
மணிக்கூண்டு எதிரே தெரியும் மரங்களுக்கிடையிலான கோபுரத்தை வரையத் தொடங்கினேன், மனம் ஒருங்கிணையவில்லை.
பின் பக்கம் திரும்பி கூண்டை நோக்கினேன் கோடுகளை நீட்டும் பொழுதில் பின்பக்கம்ல் நாயொன்று "வவ்..வவ்" என்றது, கூண்டு அருகேயிருந்தும் எதிர் ஒலி வந்த பிறகுதான் அங்கும் நாய் இருப்பதை கவனித்தேன். குரைப்புக்கு நடுவே கோடுகளை நீட்டி மடக்கினேன், முடிக்கும் தருவாயில் சரவணன் அண்ணனும் வருணும் திறந்தவெளி அரங்குக்குள் வந்துவிட்டனர். அவர்கள் அருகே சென்று நலம் விசாரிப்புகளுக்குப் பின் வருண் அவரைப் பார்த்து வரைய ஏதுவாக அமர்ந்தார் நானும் பென்சிலையும் தாளையும் எடுக்கவும் "ஓ நீங்களும் வரையுரீங்களா" எனச் சொல்லி சற்று திரும்பி இருவருக்கும் ஏற்றதொரு கோணத்தில் தன்னை இருத்திக் கொண்டார், கீற்றுகளை உருவாக்கிய பொழுதில் நான்கு பெண்கள் அருகில் வந்து அவர்களை வரைந்து தர முடியுமா எனக்கேட்கவும், ஆளுக்கொருவராக இரண்டு பேர் எங்கள் எதிரே புன்னகையோடு காத்திருக்க, சற்று பதட்டத்துடனே அவளின் வலது காதுக்கு மேலுள்ள முடியிலிருந்து கிறுக்குகையில் ஓரப் பார்வையில் வருணின் பலகையைப் பார்த்தேன், அவரது தொடக்கம் வேறொரு கோணம். முதல் முறையாக அறியாததொரு முகத்தை நேரடியாக வரையும் நடுக்கம் இருக்கத்தான் செய்தது மனதளவில். இடையில் சிறு குழந்தையொன்று அவளது தந்தையுடன் வந்து மழலையுரையாடி கொஞ்சம் வரைந்துவிட்டும் சென்றாள்.
இடையில் முகேசும், சிறீநாத்தும் எங்களோடு சேர்ந்து கொண்டனர், இவர்களின் வேகம் ஆச்சரியமாகயிருந்தது. சரவணன் அண்ணன் முகேஷ் தீட்டிய நீர்வண்ண மோனலிசா ஓவியத்தை பற்றியும், கல்லூரி அனுபவத்தை பற்றியும் அவரோடு உரையாடிய கணம் சிறப்பானதாயிருந்தது. முகம் வரைதலிலுள்ள நுணுக்கங்களை இவர்களோடு வருணும் சேர்ந்து பகிர்ந்து கொண்ட விதம் இத்தனை நாளாக இப்படியொரு தொடர்பற்றுப் போய்விட்டோமே என எண்ண வைத்தது.
அன்றைய பொழுதினை முடித்துக் கொண்டு காஃபி அருந்த சென்ற போது ராஜா முருகனும் எங்களோடு இணைந்து கொண்டார். பேச்சுகளுக்கிடையே முகேசின் வாழ்க்கை இன்னல்களையும், வரைதல் சார்ந்த அவரது தேடலும் புரிதலும் வியப்பும் ஆச்சரியமுமாக தொடர்ந்தது. இது தொடர வேண்டும்.
வருணின் கீற்றுகள் |
குழு மற்றும் வரைய முன்வந்த நான்கு முகங்கள் |
அன்றைய பொழுதினை முடித்துக் கொண்டு காஃபி அருந்த சென்ற போது ராஜா முருகனும் எங்களோடு இணைந்து கொண்டார். பேச்சுகளுக்கிடையே முகேசின் வாழ்க்கை இன்னல்களையும், வரைதல் சார்ந்த அவரது தேடலும் புரிதலும் வியப்பும் ஆச்சரியமுமாக தொடர்ந்தது. இது தொடர வேண்டும்.
1 கருத்து:
சிறப்பு.
கருத்துரையிடுக